அமைதியைக் கொண்டு வருவதில் ஐரோப்பிய தலைவர்கள் ஒற்றுமை; நன்றி சொல்கிறார் உக்ரைன் அதிபர்!
அமைதியைக் கொண்டு வருவதில் ஐரோப்பிய தலைவர்கள் ஒற்றுமை; நன்றி சொல்கிறார் உக்ரைன் அதிபர்!
ADDED : மார் 03, 2025 07:13 AM

கீவ்: 'அமைதியைக் கொண்டு வருவதில் எங்கள் அனைத்து நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் களத்தில் இறங்கி உள்ளன. இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:
நமது சுதந்திரத்திற்கு மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அமைதி மற்றும் பாதுகாப்பை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாக கைக்கோர்த்துள்ளன. இது நீண்ட காலமாக இல்லாத ஒன்று. உக்ரைனுக்கு அமைதிக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் நிலைமைகள் குறித்து எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம்.
முக்கியமான கூட்டங்கள் மற்றும் முடிவுகள் எடுக்க தயாராகி வருகிறோம். அமைதியைக் கொண்டு வருவதில் எங்கள் அனைத்து நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். கூட்டு முயற்சி நமது எதிர்காலத்தை பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.