UPDATED : ஆக 03, 2025 10:17 PM
ADDED : ஆக 03, 2025 05:52 PM

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், ஹாரி ப்ரூக்கின் சதத்தினால் இங்கிலாந்து அணியை வெற்றியை நெருங்கி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் குவித்தன.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், (118), ஆகாஷ் தீப் (66), ஜடேஜா (53), வாஷிங்டன் சுந்தர்(53) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். இதனால், இந்திய அணி 2வது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. இதன்மூலம், இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று பேட் செய்த இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் தொடங்கியதும், டக்கெட் (54), போப் (27) ஆகியோர் பிரசித் மற்றும் சிராஜ் வேகத்தில் சரிந்தனர்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த ரூட் மற்றும் ப்ரூக் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ப்ரூக் சதம் (111) அடித்து அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (105) சதமடித்து அவுட்டானார். இது அவரது 39வது டெஸ்ட் சதமாகும். மேலும், இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் (13) அடித்த வீரராகவும் உருவெடுத்துள்ளார். ப்ரூக், ரூட் சதத்தினால் இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது.