பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறு: இஸ்ரேலை கண்டித்து ஐ.நா., தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு
பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறு: இஸ்ரேலை கண்டித்து ஐ.நா., தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு
ADDED : செப் 18, 2024 10:19 PM

ஐக்கிய நாடுகள் : '' பாலஸ்தீனத்தில் சட்டவிரேதமாக இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'', என இஸ்ரேலை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேறி உள்ளது. இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்தன.
ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்த வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியும் இது முடிவுக்கு வரவில்லை. இத்தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேறி உள்ளது. பாலஸ்தீனிய அதிகாரிகள் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 124 ஓட்டுகள் கிடைத்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தன. இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன.
மேலும் இந்த தீர்மானத்தில், பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேலிய தூதர், ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.