இந்திய தொழிலாளர்கள் விரும்பும் வசதி: சவுதி அரசு உறுதி
இந்திய தொழிலாளர்கள் விரும்பும் வசதி: சவுதி அரசு உறுதி
ADDED : நவ 03, 2024 07:04 PM

ரியாத்: வேலை தேடும் இந்திய பெண் தொழிலாளர்களை கவரும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை சவுதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ளதாக, அந்த நாட்டின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சவுதி அரேபியாவில் வேலை செய்பவர்களில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள்தான். 2024ம் ஆண்டு நிலவரப்படி, இங்கு 24 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள்.
இவர்களில், 16.4 லட்சம் பேர் தனியார் துறையிலும், 7.85 லட்சம் பேர் வீட்டு வேலைகளிலும் உள்ளனர். இங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்களில், முதலிடத்தில் வங்கதேசத்தவர்கள், அதிக எண்ணிக்கையாக 26.9 லட்சம் பேர் உள்ளனர்.
சவுதி அரேபியாவின் தொழிலாளர்களில் இந்தியர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
வேலைவாய்ப்பைத் தேடும் இந்தியப் பெண்களுக்கான வாய்ப்பு சவுதியில் அதிகம் உள்ளது. அவர்கள் விரும்பும் வகையிலான பல்வேறு வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, கணிசமான தொழிலாளர் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த முயற்சிகளுக்கு மேலும் ஆதரவளிக்க, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை செய்திருக்கிறோம்.
ஆட்சேர்ப்பின் போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, தகவல் பரிமாற்றம், கூட்டு விசாரணைகள் மற்றும் கட்டாய உழைப்பை எதிர்த்துப் போராடுவதற்கான திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
இதற்காக, மூசாநெட் மற்றும் கியூவா இரண்டு தளங்களை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த தளங்களில் தொழிலாளர்கள் ஊதியங்கள், ஒப்பந்த விதிமுறைகள் அல்லது தவறான சிகிச்சைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். இதன்மூலம் தேவைப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுப்போம்.
சமீப ஆண்டுகளில், சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த பல்வேறு தொழிலாளர் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
மேலும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யும் தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஒப்பந்தங்களும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்திய பெண் தொழிலாளர்கள் விரும்பக்கூடிய வகையில், சிறப்பான வேலைச்சூழல், சவுதியில் உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.