ADDED : டிச 31, 2024 06:18 AM
பாங்காக் : தாய்லாந்து சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காவ் சான் சாலை உள்ளது. சுற்றுலா தலங்கள் நிறைந்த இந்த பகுதியில், இன்று நள்ளிரவு புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு உள்ள ஆறு மாடிகள் அடங்கிய சொகுசு ஹோட்டலில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
அந்த ஹோட்டலின், ஐந்தாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, 70க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தீப்பற்றியதால் அங்கு இருந்த பலர் அலறி துடித்தனர். இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது தீவிபத்து ஏற்பட்ட தளத்தின் ஜன்னல் வழியாக உள்ளே சிக்கிய பலரையும் மீட்டனர். தீயணைப்பு வீரர்கள், நீண்டநேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், பிரேசிலைச் சேர்ந்த பெண், உக்ரைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். இதுதவிர, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.