தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கு 2,000 அமெரிக்க டாலர் வாடகை: காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சலஸ் மக்கள் திண்டாட்டம்
தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கு 2,000 அமெரிக்க டாலர் வாடகை: காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சலஸ் மக்கள் திண்டாட்டம்
ADDED : ஜன 14, 2025 06:22 AM

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத்தீயால் பொது அவசர சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற தனியார் தீயணைப்பு நிறுவனங்களை அழைத்தனர். தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கு 2,000 அமெரிக்க டாலர்களை தனியார் தீயணைப்பு நிறுவனங்கள் வசூல் செய்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, ஆறாவது நாளாக நேற்றும் கொழுந்துவிட்டு எரிகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அண்டை மாகாணங்களில் இருந்து தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் வாயிலாக, கடல் நீரால் தீயை அணைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.
இதற்கிடையே அந்தப் பகுதியில் 110 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 24 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர மேலும் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி பகுதிகளில், 20,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து நாசமானது.
இறப்பு மற்றும் பேரழிவிற்கு மத்தியில், லாஸ் ஏஸ்சலஸ் நகரில் வசிக்கும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்திற்கு 2,000 அமெரிக்க டாலர்களுக்கு தனியார் தீயணைப்பு வீரர்களை பணியமர்த்தியுள்ளனர்.
தனியார் தீயணைப்பு நிறுவனங்கள் தங்கள் சொந்த தீயணைப்பு இயந்திரங்கள், நீர் விநியோகங்கள், தீ தடுப்பு ரசாயனங்கள் மற்றும் பிற தொழில்துறை தர உபகரணங்களுடன் தரையிறங்கியுள்ளன. அவர்களுக்கு இப்போது பெரும் தேவை உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பற்றி எரியும் காட்டுத்தீ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.