சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் 50 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்
சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் 50 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்
ADDED : அக் 13, 2024 03:45 AM

சஹாரா : கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்திஉள்ளது.
வட ஆப்ரிக்காவில் சஹாரா பாலைவனம் உள்ளது. உலகின் மிகப்பெரிய பாலைவனமான இது, மொராக்கோவின் தெற்கு பகுதியில் அமைந்துஉள்ளது.
இந்த பாலைவனத்தில் மிக கொடிய விஷமுள்ள உயிரினங்கள் உள்ளன. மணல் திட்டுகளுடன் மிகவும் சூடாக இருக்கும் இந்த பாலைவனத்தில் மழைப் பொழிவு என்பது மிகவும் அரிதான விஷயம்.
சஹாரா என்றாலே வறட்சி, மணற்பரப்பு, வெப்பம் மட்டுமே நினைவுக்கு வரும் நிலையில், இந்த ஆண்டு அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தென் கிழக்கு மொராக்கோவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
தலைநகர் ரபாத்தில் இருந்து, 450 கி.மீ., தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில், ஒரே நாளில், 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழையைவிட அதிகம் என கூறப்படுகிறது.
வரலாறு காணாத மழை பொழிவால் ஐகோராவிற்கும் - டாடாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பியுள்ளன.
இந்த திடீர் கனமழையால், சஹாராவில் உள்ள இரிக்கி ஏரியும் நிரம்பி உள்ளது. இது, நாசா அறிவியல் மைய செயற்கைக் கோள் எடுத்த புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மொராக்கோ வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில, 'குறைந்த நேரத்தில் இத்தனை பெரிய மழைப்பொழிவு பதிவாகி, 30 முதல் 50 ஆண்டு காலம் ஆகிவிட்டது. வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
'இது அப்பகுதியின் வானிலையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இப்பகுதியில் நிலவும் காற்றில் வழக்கத்தைவிட அதிகமாக ஈரப்பதம் இருப்பதால், நீர் ஆவியாவதை ஊக்குவித்து மேலும் சில புயல்களை உருவாக்கும்' என, தெரிவித்தனர்.
சஹாராவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம், அங்கு, ஆங்காங்கே இருக்கும் ஈச்ச மரங்களை சூழ்ந்துள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.