வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இந்தோனேஷியாவில் 17 பேர் பலி
வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இந்தோனேஷியாவில் 17 பேர் பலி
ADDED : நவ 27, 2025 12:24 AM
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை தீவிரமடையும் பருவமழையால் பெருவெள்ளம், நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் பருவமழை தீவிரமடைந்ததால், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
சிபோல்கா, தபனுலி உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதித்துள்ளன.
நீர்நிலைகள் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் பாய்ந்ததால், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பிரதான சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
மலைபாங்கான பகுதிகளில் பெரும் வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டன.
சுமத்ரா மாகாணத்தில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. பலர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

