ஆயுத குழுவால் கடத்தப்பட்ட 25 பள்ளி மாணவியர் மீட்பு
ஆயுத குழுவால் கடத்தப்பட்ட 25 பள்ளி மாணவியர் மீட்பு
ADDED : நவ 27, 2025 12:24 AM
அபுஜா: நைஜீரியாவில் கடந்த வாரம் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவியர் 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிபர் போலா டினுபு தெரிவித்தார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ்., உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. அந்த பயங்கரவாதிகள் கடத்தல், பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்றச் செயல்களை செய்து வருகின்றனர்.
நைஜீரியாவில் 2014ம் ஆண்டு முதல் 1,500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் கெபி மாகாணத்தில் பெண்கள் உறைவிடப் பள்ளியில், 12 முதல் 15 வயதுடைய 24 மாணவியர் கடத்தப்பட்டனர்.
பள்ளிக்குள் புகுந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், தடுக்க முயன்ற ஊழியர்கள் இரண்டு பேரை கொன்றுவிட்டு, மாணவியரைக் கடத்திச் சென்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அதற்கடுத்த சில நாட்களில், நைஜர் மாகாணத்தில் உள்ள உறைவிட பள்ளியில், 300 மாணவர்கள் உள்ளிட்டோர் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் 50 பேர் மட்டும் தப்பி வந்தனர்.
இந்நிலையில், கெபி மாகாணத்தில் கடந்த வாரம் கடத்தப்பட்ட 24 மாணவியரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, அதிபர் போலா டினுபு தெரிவித்துள்ளார். கடத்தியவர்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

