அமெரிக்காவுக்கு வெளிநாட்டு பணம் கொட்டுகிறது; விலைவாசி குறைகிறது: அதிபர் டிரம்ப் பெருமிதம்
அமெரிக்காவுக்கு வெளிநாட்டு பணம் கொட்டுகிறது; விலைவாசி குறைகிறது: அதிபர் டிரம்ப் பெருமிதம்
ADDED : ஏப் 07, 2025 09:04 PM

வாஷிங்டன்: உலகளாவில் சந்தை சரிவு இருந்த போதிலும் அமெரிக்காவில் பண வீக்கம் இல்லை. வெளிநாட்டு பணம் கொட்டுகிறது. விலைவாசியும் குறைகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக வரி விதிப்பதாகவும், அமெரிக்காவும் அதே அளவுக்கு வரியை விதிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல, இந்தியா மீது 26 சதவீத வரியும், சீனா மீது 34 சதவீத பரஸ்பர வரியையும் டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் இவ்வாறு பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்த நிலையில், இதன் காரணமாக, தற்போது உலகளவில் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அமெரிக்க சந்தையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
எனினும் இவற்றை அவர் பொருட்படுத்தவில்லை. இன்று அவர் பதிவிட்டுள்ளதாவது:
உலக சந்தைகள் கடுமையாக சரிந்தாலும், அமெரிக்காவில் பணவீக்கம் இல்லை . சீனா போன்ற வெளிநாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்திக் சுரண்ட அனுமதித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு , கடந்த கால அமெரிக்கத் தலைவர்கள் தான் காரணம்.
தற்போதைய நிலையில், எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன. வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. பணவீக்கம் இல்லை, நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்யப்படும் அமெரிக்கா, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகளில் துஷ்பிரயோகம் செய்யும் நாடுகளிடமிருந்து வாரத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டி வருகிறது.
மேலும் உலகளாவிய பொருளாதார சரிவை எதிர்கொள்வதால், சீன சந்தைகள் சரிந்து வருகிறது.
அவர்களுக்கான வரிகளை நான் நீக்க மாட்டேன். விலை உயர்வு குறித்த கவலைகள் தேவையில்லை. வரிகள் என்பது அழகான விஷயம்.
இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.