பேமென்ட் இன்னும் வரல... வங்கதேச பிரீமியர் லீக் விளையாட சென்ற வெளிநாட்டு வீரர்கள் சோகம்
பேமென்ட் இன்னும் வரல... வங்கதேச பிரீமியர் லீக் விளையாட சென்ற வெளிநாட்டு வீரர்கள் சோகம்
ADDED : பிப் 02, 2025 09:48 PM

டாக்கா: பி.பி.எல்., கிரிக்கெட் தொடரில் விளையாடச் சென்ற வெளிநாட்டு வீரர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் டிக்கெட்டுக்களை வழங்காமல் அணி நிர்வாகம் இழுத்தடித்தால், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரைப் போன்று வங்கதேசத்தில் பி.பி.எல்., எனப்படும் டி.20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டர்பர் ராஜ்ஷாகி அணி, வீரர்களுக்கு உரிய ஊதியத்தையும், வெளிநாட்டு வீரர்களுக்கான விமான டிக்கெட்டையும் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் முகமது ஹாரிஸ், ஆப்கானிஸ்தான் அப்தாப் ஆலம், வெஸ்ட் இண்டீஸின் மார்க் தெயல், ஜிம்பாப்வே ரியான் புர்ல், வெஸ்ட் இண்டீஸின் மிகுல் கம்மின்ஸ் ஆகியோருக்கும் உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கடந்த 11 நாட்களாக தினப்படியும் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் டாக்காவில் உள்ள ஓட்டலிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டர்பர் ராஜ்ஷாகி அணி நேற்றைய ஆட்டத்துடன் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், வீரர்களின் அழைப்புகளுக்கும் பதிலளிக்காமல் இருந்து வருகிறது.
வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை ஊதியத்தை கொடுக்காவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிப் மகமுது, ராஜ்ஷாகி அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.