ADDED : ஜூலை 03, 2025 01:34 AM

டாக்கா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. அங்கு கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை இழந்து, இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ளது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனா மீது ஏராளமான வழக்குகள் பதிந்துள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா மற்றும் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான வங்கதேச சாத்ரா லீக் தலைவர் ஷகில் அகண்ட் புல்புல் இடையேயான தொலைபேசி உரையாடல் ஆடியோ கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில், 'என் மீது 227 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, எனவே 227 பேரை கொல்ல எனக்கு உரிமம் கிடைத்துவிட்டது' என ஷேக் ஹசீனா கூறியிருந்தார்.
இதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், இந்த ஆடியோவை அடிப்படையாக வைத்து ஷேக் ஹசீனா மற்றும் ஷாகில் புல்புல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் 2010ல் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவால் மீண்டும் துவங்கப்பட்டது. அவர் துவங்கிய அமைப்பே அவருக்கு எதிராக விசாரணை நடத்தியது.
அவர் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஆடியோவில் உள்ள குரல் ஷேக் ஹசீனாவுடையது என உறுதியானது.
இதையடுத்து ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனையும், அவருடன் பேசிய ஷாகில் புல்புலுக்கு இரண்டு மாத சிறை தண்டனையும் விதித்தது.