ப்ளூம்பெர்க் பொருளாதார ஆலோசனைக் குழுவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் பிரபு
ப்ளூம்பெர்க் பொருளாதார ஆலோசனைக் குழுவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் பிரபு
ADDED : ஏப் 10, 2025 09:29 PM

நியூயார்க்:முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ப்ளூம்பெர்க்கின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூம்பெர்க் பொருளாதார ஆலோசனைக் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை அந்தக் குழுவின் தலைவரான, அமெரிக்க முன்னாள் வர்த்தகத்துறை செயலர் ஜினா ரைமண்டோ, இத்தாலி முன்னாள் பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் நேற்று அறிவித்தனர்.
இந்த புதிய குழுவினர் பட்டியலில் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர், ஐ.எம்.எப்., இன் முதல் துணை நிர்வாக இயக்குநர், கீதா கோபிநாத் மற்றும் பல தொழில் துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த குழுவில் உள்ள ஒரே இந்தியர் சுரேஷ் பிரபு தான்.
யார் இந்த சுரேஷ் பிரபு
சுரேஷ் பிரபு சி.ஏ., முடித்தவர். தற்போது ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள பல்கலை ஒன்றின் வேந்தராக உள்ளார். லண்டனில் உள்ள பொருளாதாரத்திற்கான கல்லூரியில் கவுரவ பேராசிரியராகவும் உள்ளார்.
சுரேஷ் பிரபு ஆறு முறை எம்.பி.,யாக இருந்தவர். வாஜ்பாய் அரசிலும், பிரதமர் மோடியின் முதல் இரண்டு ஆட்சி காலத்திலும் தொழில், மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் வனம், ரயில்வே, சிவில் விமானப் போக்குவரத்து, வணிகம் மற்றும் தொழில், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற பல அமைச்சரவை இலாகாக்களை அவர் வகித்தார்.கூடுதலாக, அவர் ஜி-7 மற்றும் ஜி-20 க்கு பிரதமரின் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.