ADDED : ஆக 03, 2025 02:15 AM
போகோடா: கொலம்பியாவின் முன்னாள் அதிபர் அல்வாரோ உரிபேவுக்கு ஊழல் வழக்கில், 12 ஆண்டு வீட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 2002 முதல் 2010 வரை அதிபராக இருந்தவர் அல்வாரோ உரிபே, 73. பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் 1990களில் துணை ராணுவக் குழுக்களின் கிளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கான சாட்சியங்களை கலைக்க அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு கொலம்பியா உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அல்வாரோ உரிபேவுக்கு, 12 ஆண்டு வீட்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகள் பொதுப் பதவியில் இருக்க தடையுடன், ௭ கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாட்டில் அதிபராக இருந்த ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறை. இந்த தீர்ப்பை எதிர்த்து உரிபே மேல்முறையீடு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.