ADDED : டிச 12, 2024 02:55 AM

சியோல் : கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், பட்ஜெட் மசோதா தாக்கல் செய்வது தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் இயோல் கடந்த வாரம் அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியில் பல எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை அதிபர் திரும்பப் பெற்றார்.
அவசர சட்டத்தை அமல்படுத்தும்படி அதிபர் யூன் சுக் இயோலுக்கு பரிந்துரைத்த முன்னாள் ராணுவ அமைச்சர் கிம் யாங் ஹயூன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்த குளியலறையில் தன் உள்ளாடைகளை பயன்படுத்தி கிம் யாங் ஹயூன் தற்கொலைக்கு முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனே கிம் யாங் ஹயூனின் செயலை தடுத்து நிறுத்தினர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.