அமெரிக்க அதிபரால் நடுத்தெருவில் நின்ற பிரான்ஸ் அதிபர்
அமெரிக்க அதிபரால் நடுத்தெருவில் நின்ற பிரான்ஸ் அதிபர்
ADDED : செப் 25, 2025 12:34 AM
நியூயார்க்:ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சென்றபோது, நியூயார்க் நகரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஐ.நா., 80வது பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.
இதற்காக அவர் சென்றபோது, நியூயார்க்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் காரும் நிறுத்தப்பட்டது.
திடீரென கார் நிறுத்தப்பட்டதால் பதற்றமடைந்த மேக்ரோன், இது குறித்து விசாரித்தார்.
அப்போது, டிரம்ப் வாகனங்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிரம்பை போனில் தொடர்புகொண்டு மேக்ரோன் பேசினார். வழிவிட சொல்லுங்கள், உங்களுக்காக எல்லாம் மூடப்பட்டிருப்பதால் நான் தெருவில் காத்திருக்கிறேன் என அவர் போனில் தெரிவித்தார்.
அதற்குள், டிரம்பின் வாகனங்கள் கடந்து சென்றுவிட்டன. அதேநேரத்தில், மேக்ரோன் தனது காருக்கு திரும்பாமல் நடந்து சென்றார். இந்த காட்சிகள் சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.