ஜார்ஜ் சோரசுக்கு உயரிய விருது: அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு
ஜார்ஜ் சோரசுக்கு உயரிய விருது: அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு
ADDED : ஜன 06, 2025 12:19 AM

வாஷிங்டன்: தன் அறக்கட்டளை வாயிலாக பல நாடுகளுக்கு நன்கொடை அளித்து, அங்கு தேர்தல் நடைமுறையில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கு, அமெரிக்காவின் உயரிய சிவிலியன் விருதை வழங்கியதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகவும் உயரிய சிவிலியன் விருதான, 'மெடல் ஆப் பிரீடம்' எனப்படும் சுதந்திர விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
அரசியல், விளையாட்டு, கலை என பல துறைகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, இந்த விருது அமெரிக்க அதிபரால் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதை, அதிபர் பதவியில் இருந்து விரைவில் விலக இருக்கும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் நேற்று முன்தினம் வழங்கினார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, நடிகர்கள் மைக்கேல் பாக்ஸ், டென்சல் வாஷிங்டன் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஹங்கேரியில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவருடைய சார்பில் அவரது மகன் விருதைப் பெற்றுக் கொண்டார்.
ஜார்ஜ் சோரசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரபல தொழிலதிபர், குடியரசு கட்சி ஆதரவாளர் எலான் மஸ்க், இதை கேலிக்குரிய நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
தன், 'ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' அறக்கட்டளை வாயிலாக, உலகின் பல நாடுகளுக்கும், ஜார்ஜ் சோரஸ் நன்கொடை வழங்கி வருகிறார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான நிதி என்ற பெயரில், அந்த நாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் அவர் தலையிடுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள குடியரசு கட்சி, ஜார்ஜ் சோரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
நம் நாட்டிலும், ஜார்ஜ் சோரஸ் தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை வாயிலாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தொடர்புடைய அமைப்புக்கு நன்கொடை வழங்கப்பட்டதாக, சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது.
காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஜார்ஜ் சோரஸ். அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

