தேர்தலில் பலத்தை காட்ட முயற்சி: எலான் மஸ்க் மீது ஜெர்மனி குற்றச்சாட்டு
தேர்தலில் பலத்தை காட்ட முயற்சி: எலான் மஸ்க் மீது ஜெர்மனி குற்றச்சாட்டு
ADDED : டிச 30, 2024 09:43 PM

பெர்லின்: ஜெர்மனியில் வரும் பிப்ரவரியில் நடக்க உள்ள பார்லிமென்ட்தேர்தலில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது அதிகாரத்தை காட்ட முயற்சி செய்கிறார் என்று ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது.
ஜெர்மனியில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் பார்லிமென்ட்தேர்தல் நடைபெறும் நிலையில், ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியை ஆதரித்த பின்னர் மஸ்கின் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஓலாப் ஸ்கோல்ஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தார். அவர் கொண்டுவந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசு அண்மையில் கவிழ்ந்தது.
இந்நிலையில், ஜெர்மனியில் 2025 -பிப்.23ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள தேர்தலில் தனது செல்வாக்கை காட்ட, எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க், முயன்று வருகிறார் என்று அரசு செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
எலான் மஸ்க் , ஜெர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சியான ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சியை(ஏ.எப்.டி) வெளிப்படையாக ஆதரித்துள்ளார். மஸ்க் தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தி வருகிறார்.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான மஸ்க், தனது கணிசமான முதலீடுகள் காரணமாக, இங்குள்ள அரசியலை எடைபோட்டு பார்க்கிறார். தனது உரிமையைப் பாதுகாத்து, கட்டுப்பாடுகள், வரிகள் மற்றும் சந்தைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்காக, ஏ.எப்.டி.,யின் அணுகுமுறையைப் பாராட்டுகிறார்.
இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மஸ்க், ஏற்கனவே, அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்பின் நிர்வாகத்திற்கு வெளியுறவு ஆலோசகராக பணியாற்ற தயாராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.