UPDATED : ஆக 09, 2024 01:43 PM
ADDED : ஆக 09, 2024 01:38 AM

பாரிஸ்: ஒலிம்பிக் தடகளத்தில், ஈட்டி எறிதல் போட்டி பைனலில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீ தூரம் ஈட்டி எறிந்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். பாகிஸ்தானுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நேற்று ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று முடிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட 12 வீரர்கள் பைனலுக்கு முன்னேறினர். தகுதிசுற்றில் நீரஜ் முதலிடம் பிடித்ததால், அவருக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பைனலில் நீரஜ் சோப்ரா, தனது 2வது முயற்சியில், அதிகபட்சமாக 89.45 மீ தூரம் ஈட்டி எறிந்தார். அதேசமயம் பாகிஸ்தானின் நதீம், 92.97 மீ., தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனை படைத்தார். தவிர தனது கடைசி முயற்சியிலும், அவர் 90 மீ.,க்கும் அதிகமாக வீசி அசத்தினார்.
முடிவில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு தங்கமும், நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளியும், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (88.54 மீ) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் வெள்ளிப் பதக்கம் ஆகும்.