சீனாவில் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான தங்க சுரங்கம்
சீனாவில் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான தங்க சுரங்கம்
ADDED : பிப் 09, 2025 01:34 AM

பீஜிங், சீனாவின் ஹுனான் மாகாணம், பிங்ஜியாங்கில் உள்ள வாங்கூ தங்க சுரங்கத்தில், 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 10 லட்சம் கிலோ தங்க துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நம் அண்டை நாடான சீனாவின் ஹுனான் மாகாணத்தின் புவியியல் நிறுவனம், வாங்கூ தங்க சுரங்கத்தில் பூமிக்கு அடியில், 6,500 அடி ஆழத்தில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் அளவிலான தங்கம் இருப்பதை கண்டறிந்தது.
இங்கு, 3 லட்சம் கிலோ வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டது.
நவீன தொழில்நுட்ப முறையில், 10,000 அடி வரை சுரங்கம் தோண்டியதில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவிலான தங்க துகள்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள தங்கத்தின் அளவு, 10 லட்சம் கிலோவுக்கு மேல் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபத்திய வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்க சுரங்கம் இது என கூறப்படுகிறது. இதன் வாயிலாக உலகளாவிய தங்க சுரங்க சந்தையில், ஹுனான் மாகாணம் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உள்ள, 'சவுத் டீப்' சுரங்கத்தில், 9 லட்சம் கிலோ தங்கம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதை, சீனாவின் வாங்கூ சுரங்கம் முந்திவிட்டதை அடுத்து, உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் என்ற பெயரை பெற்றுள்ளது.

