நிலக்கரி மின் உற்பத்திக்கு பிரிட்டன்... குட் பை' :கடைசி ஆலையும் நேற்று மூடப்பட்டது
நிலக்கரி மின் உற்பத்திக்கு பிரிட்டன்... குட் பை' :கடைசி ஆலையும் நேற்று மூடப்பட்டது
ADDED : அக் 01, 2024 01:15 AM

லண்டன் : உலகின் முதல் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் தாயகமான பிரிட்டன், அதன் கடைசி யூனிட்டான 'ராட்க்ளிப் - ஆன் - சோர்' ஆலையை நேற்று மூடியது. இதன் வாயிலாக, 'ஜி - 7' அமைப்பில் உள்ள நாடுகளில் நிலக்கரி மின் உற்பத்தியை முற்றிலுமாக நீக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரிட்டன் பெற்றுள்ளது.
கடந்த 1800களில் இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை, 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளதாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா., சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த, 2030ம் ஆண்டுக்குள் உலகளாவிய உமிழ்வுகள் 45 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்றும், 2050க்குள் நிகர பூஜ்யத்தை அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, உலகின் முதல் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை துவங்கிய ஐரோப்பிய நாடான பிரிட்டன், 2025க்குள் நிகர பூஜ்ய உமிழ்வு நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தது.
இதையடுத்து, நாட்டில் இருந்த கடைசி நிலக்கரி மின் உற்பத்தி ஆலையை நேற்று அந்நாட்டு அரசு மூடியது.
அங்கு, 1882ல் தாமஸ் ஆல்வா எடிசனின் எலக்ட்ரிக் லைட் நிறுவனத்தின் உதவியுடன், 'ஹோல்போர்ன் வயடக்ட்' என்ற நிலக்கரி உற்பத்தி நிறுவனம் லண்டனில் துவங்கப்பட்டது.
அன்று முதல் நேற்று வரை, பிரிட்டனின் வளர்ச்சியில் நிலக்கரி முக்கிய பங்காற்றிஉள்ளது. நிகர பூஜ்ய உமிழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு செயல்பட்டு வந்த பல்வேறு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை பிரிட்டன் படிப்படியாக மூடியது.
கடைசியாக, நாட்டிங்ஹாம்ஷையரில் செயல்பட்டு வந்த ராட்க்ளிப் ஆலை நேற்று மூடப்பட்டது. கடந்த 57 ஆண்டுகளாக நிலக்கரி வாயிலாக மின்சாரத்தை தயாரித்து வந்த ஆலை, அதன் மூச்சை நேற்று கடைசியாக நிறுத்தியது.
இதன் வாயிலாக, 142 ஆண்டுகளாக நடந்து வந்த நிலக்கரி மின் உற்பத்திக்கு, பிரிட்டன் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த ஆலை துவங்கும் போது, 3,000 பணியாளர்கள் இருந்த நிலையில், கடைசியாக 170 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். மூடப்பட்ட ஆலையை அகற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுவர் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை வாயிலாக, ஜி - 7 அமைப்பில் உள்ள நாடுகளில் நிலக்கரி மின் உற்பத்தியை முற்றிலுமாக நீக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரிட்டன் பெற்றுள்ளது.