ADDED : ஏப் 06, 2024 04:14 AM
லண்டன், : கொரோனாவை விட 100 மடங்கு கொடிய எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் தொற்று வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் உலக நாடுகளை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது:
எச்5என்1 பறவை காய்ச்சல் தொற்றுநோய் வைரஸ் மிகவும் அபாயகரமானது. உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸால் 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இ.எப்.எஸ்.ஏ., நிறுவனம் விலங்குகளிலிருந்து இந்த வைரஸ் பரவுதல் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும் மக்கள் சுகாதார முன்னெச்சரிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. டெக்சாஸைச் சேர்ந்த ஒருவர் கறவை மாடுகளில் இருந்து இப்பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வைரஸால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்த கவலைகள் உச்சத்தை எட்டியுள்ளன. இது மோசமான ஒரு தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று இங்கிலாந்து நிறுவனம் எச்சரித்துள்ளது.
பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி, ''இந்த வைரஸுடன் நாங்கள் ஆபத்தான முறையில் நெருங்கி வருகிறோம்,'' என தெரிவித்துள்ளார். மனிதர்கள் உட்பட பாலுாட்டிகளுக்கு இந்த வைரஸ் தொற்று நோயை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

