பொறுப்பற்ற மனிதர் டிரம்ப்: பயங்கர சம்பவம் செய்து விடுவார்; கட்சி மாநாட்டில் எச்சரித்தார் கமலா
பொறுப்பற்ற மனிதர் டிரம்ப்: பயங்கர சம்பவம் செய்து விடுவார்; கட்சி மாநாட்டில் எச்சரித்தார் கமலா
ADDED : ஆக 23, 2024 09:51 AM

வாஷிங்டன்: 'முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பொறுப்பற்றவர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படுத்தி விடுவார்' என ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட, அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஒபாமா உள்ளிட்டோர் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாநாட்டில் நிறைவு நாளில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கமலா ஹாரிஸ் ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
டிரம்பை விமர்சித்தார் கமலா
மாநாட்டில் அவர் பேசியதாவது: என் அம்மா ஷியாமளா ஹாரிஸை ஒவ்வொரு நாளும் மிஸ் செய்கிறேன். அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தேர்தலின் மூலம், நமது தேசம் கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் மற்றும் போர்களைக் கடந்து செல்ல முடியும். முன்னோக்கி செல்லும் காலம் உருவாகும்.
விளைவுகள்
அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக இருப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானவை. அதிபர் தேர்தல் என்பது நம் வாழ்வில் மிக முக்கியமானது. வாழ்நாள் முழுவதும் மக்கள் தான் எனக்கு எஜமானர்கள். இவ்வாறு அவர் பேசினார்.