ADDED : நவ 02, 2025 12:42 AM
ஜெருசலேம்: சமீபத்தில், ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களிடம் ஒப்படைத்தது பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் -- மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டால் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. பதிலுக்கு, இஸ்ரேலும் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, 28 பிணைக்கைதிகளில், 17 பேரின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும், 11 உடல்கள் ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிணைக்கைதிகள் மூன்று பேரின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்படைத்தனர். பதிலுக்கு, 30 பாலஸ்தீனர்களின் உடல்களை காசா சுகாதார அமைச்சகத்திடம் இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது.
ஆனால் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்படைத்த உடல்கள், பிணைக்கைதிகளுடையது அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத உடல்களின் மாதிரிகளை ஹமாஸ் ஒப்படைக்க முன்வந்ததாகவும், ஆனால் அவற்றைப் பெற மறுத்து, பரிசோதனைக்காக எச்சங்களைக் கேட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இதேபோன்று போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல், 225 பேரின் உடல்களை காசா சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. அவற்றில், 75 மட்டுமே குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

