போலீஸ் - -கடத்தல்காரர் சண்டை சவுதியில் இந்தியர் உயிரிழப்பு
போலீஸ் - -கடத்தல்காரர் சண்டை சவுதியில் இந்தியர் உயிரிழப்பு
ADDED : நவ 02, 2025 12:42 AM

ரியாத்: சவுதி அரேபியாவில், போலீசார் - மதுபான கடத்தல்காரர்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், இந்தியாவை சேர்ந்த இளைஞர் சுட்டு கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் குமார் மகோடோ, 27. இவர் கடந்த, ஒன்பது மாதங்களுக்கு முன் வேலைக்காக, மேற்காசிய நாடான சவுதி அரேபியா சென்றார்.
ஜெட்டா நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், 'டவர் லைன் பிட்டர்' ஆக விஜய் குமார் பணியாற்றி வந்தார். கடந்த, 24ம் தேதி, நிறுவன அதிகாரி ஒருவர், கட்டுமானப் பொருட்களை எடுத்துவரும்படி கூறியதால், அவர் வெளியில் சென்றார்.
அந்த சமயம் ஜெட்டா நகர போலீசார், மதுபானம் கடத்தல் கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. அப்போது அந்த இடத்தை விஜய் குமார் மகோடா கடக்க முயன்றார்.
கடத்தல்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், அந்த குண்டு விஜய் குமார் மகோடா மீது பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையிலும், தன் மொபைல் போனில், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக, மனைவி வசந்தி தேவிக்கு, 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பி குண்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தகவலை தெரிவித்தார்.
இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும், விஜய் குமார் மகோடா உயிருடன் இருப்பதாக நினைத்திருந்தனர். ஆனால், கடந்த 24ம் தேதியே அவர் உயிரிழந்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

