காசாவில் மீண்டும் தலைதுாக்கும் ஹமாஸ்: பொதுவெளியில் 8 பேருக்கு மரண தண்டனை
காசாவில் மீண்டும் தலைதுாக்கும் ஹமாஸ்: பொதுவெளியில் 8 பேருக்கு மரண தண்டனை
ADDED : அக் 15, 2025 10:17 PM

காசா : இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள், பாலஸ்தீனியர்கள் எட்டு பேரை பொதுவெளியில் நிறுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. அமெரிக்கா முன்மொழிந்த அமைதி திட்டத்தின் அடிப்படையில் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹமாஸ் தன்வசம் இருந்த பிணைக் கைதிகளை விடுவித்தது. இதே போன்று இஸ்ரேலும் தங்கள் நாட்டு சிறையில் இருந்த பாலஸ்தீனியர்களை விடுவிக்கத் தொடங்கியது. இதனால் காசாவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஹமாஸ் அமைப்பினருக்கும், காசாவின் செல்வாக்கு மிக்க ஆயுதமேந்திய குழுவான டக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 32 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலியப் படைகள் வெளியேறத் தொடங்கிய உடன், ஹமாஸ் பயங்கரவாதிகள், காசாவை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். கருப்பு முகமூடி அணிந்த ஹமாஸ் காவலர்கள் வடக்கு காசாவில் தெருக்களில் ரோந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், எட்டு ஆண்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சாலை ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.அந்த வீடியோவில், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு மண்டியிட்ட நிலையில் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது. தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அவர்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்றனர்.இஸ்ரேல் ஆதரவு பெற்ற சில ஹமாஸ் எதிர்ப்பு குழுக்கள், மனிதாபிமான உதவிகளை திருடி, லாபத்திற்காக விற்பனை செய்ததாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது காசாவின் பட்டினி நெருக்கடிக்கு காரணமாக அமைந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்களை கொன்றதாகவும் தெரிவித்துள்ளது.
முடியாவிட்டால் முடிப்போம்!
ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளோம். அதை அவர்களால் செய்ய முடியாவிட்டால், நாங்கள் செய்து முடிப்போம். அது மிகக் கடுமையானதாகவும் இருக்கும். டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர்