பிணைக்கைதிகள் 11 பேர் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்; இன்று 8 பேர் விடுவிப்பு
பிணைக்கைதிகள் 11 பேர் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்; இன்று 8 பேர் விடுவிப்பு
UPDATED : ஜன 30, 2025 05:41 PM
ADDED : ஜன 30, 2025 08:10 AM

ஜெருசலேம்: அடுத்து விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகள் 11 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. இவர்களில் 8 பேர் இன்று (ஜன.,30) விடுவிக்கப்பட்டனர். இவர்களை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இதன்படி, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை பிணைக்கைதிகள் 7 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்து விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகள் 11 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. இவர்கள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர். இவர்களில் 8 பேர் இன்று (ஜன.,30) விடுவிக்கப்பட்டனர். இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாவது: இந்த வாரம் இரண்டு நாட்களில் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் உட்பட பிணைக்கைதிகள் 11 பேர் விடுவிக்கப்படுவார்கள்.
ஹமாஸ் இதுவரை ஏழு பணயக்கைதிகளை விடுவித்துள்ளது, அதற்கு ஈடாக கைதிகள் 290 பேர் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பட்டியல் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டினர் மொத்தம் 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.
காசாவில் போர் நிறுத்தம் ஜனவரி 19ம் தேதி நடைமுறைக்கு வந்ததால், போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்குள் ஏராளமான உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

