ADDED : ஜூலை 12, 2025 06:10 AM

பாரீஸ்: பிரபல பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை, பாரீஸில் நடந்த ஏலத்தில், 86 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரீஸில், மிகவும் பழமையான மற்றும் அரிய பொருட்களுக்கான ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த, 'சோத்பீஸ்' நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
மிகவும் பழமையான பொருட்களை சேகரிக்கும், ஒன்பது ஏலதாரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். தொலைபேசி மூலமாக, மிகவும் பரபரப்பாக நடந்த ஏலத்தில், பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக, 1984ல் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பை, ஏலம் விடப்பட்டது.
1 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 8.6 கோடி ரூபாய்க்கு ஏலம் துவங்கியது.
அடுத்தடுத்து ஏலத்தொகை உயர, அடுத்த 10 நிமிடத்தில் ஏலம் முடிந்தது.
ஜப்பானைச் சேர்ந்த தனியார் ஏலதாரரும், பழமையான பொருட்களின் சேகரிப்பாளரும், இந்த பையை 10.1 மில்லியன் டாலருக்கு, இந்திய மதிப்பில் 83 கோடி ரூபாய்க்கு பிர்கினின் கைப்பையை ஏலம் எடுத்தார்.
நம் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்டோர் பிர்கின் கைப்பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.