இலங்கை பிரதமராக ஹரிணி பொறுப்பேற்பு; புதிய அமைச்சரவையும் பதவியேற்பு
இலங்கை பிரதமராக ஹரிணி பொறுப்பேற்பு; புதிய அமைச்சரவையும் பதவியேற்பு
UPDATED : நவ 18, 2024 02:30 PM
ADDED : நவ 18, 2024 11:31 AM

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றார்.
இலங்கை பார்லிமென்டின் பதவி காலம் இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில், புதிய அதிபர் அனுரா குமாரா முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 3 தினங்களுக்கு முன்பு இலங்கை பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதிபர் குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதில் 13 தமிழர்களும் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், ஒட்டுமொத்தமாக இலங்கை பார்லிமென்டில் மொத்தம் 28 தமிழர்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.
சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 17.7 சதவீத ஓட்டுக்களுடன் 2வது இடத்தை பிடித்தது.
இதையடுத்து, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை குறித்த விபரம் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கையின் பிரதமராக ஹரினி அமரசூரியா அறிவிக்கப்பட்டார். அவர், அதிபர் அநுர குமார திசாநாயக முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டது. அதில், தமிழரான ராமலிங்கம் சந்திரசேகருக்கு மீன்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டவிதிகளின்படி, 30 அமைச்சர்களும், 40 இணையமைச்சர்களும் பதவியேற்கலாம். ஆனால், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே அமைச்சரவையை அமைக்க, அதிபர் அநுர குமார திசாநாயக முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.