முதல் முறையாக மவுனம் கலைத்தார் ஹசீனா எல்லாம் போச்சு! கொலை சதியிலிருந்து தப்பியதாக தழுதழுப்பு
முதல் முறையாக மவுனம் கலைத்தார் ஹசீனா எல்லாம் போச்சு! கொலை சதியிலிருந்து தப்பியதாக தழுதழுப்பு
ADDED : ஜன 19, 2025 12:38 AM

புதுடில்லி ''என்னைக் கொல்வதற்கு நடந்த சதி திட்டத்தில் இருந்து, 30 நிமிட இடைவெளியில் தப்பித்தேன். தற்போது மிகுந்த மனவேதனையில் உள்ளேன். வீடு, உடைமைகள் உட்பட எல்லாம் எரிக்கப்பட்டு விட்டன,'' என, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடந்த இடஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்பட்ட ேஷக் முஜிபுர் ரகுமானின் சிலைகள் உடைக்கப்பட்டன.
கடந்தாண்டு ஆக., 5ம் தேதி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு, டாக்காவில் உள்ள பிரதமர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.
போராட்டம்
பாதுகாப்பு படையினரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் நிலைமை மோசமானது.
அத்துடன், '45 நிமிடங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், அடுத்து நடக்கும் அசம்பாவிதத்துக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது' என, பிரதமர் ஷேக் ஹசீனாவிடம், ராணுவமும் கை விரித்தது. இதையடுத்து, ஹசீனா தன் சகோதரியுடன், ெஹலிகாப்டர் வாயிலாக தப்பி நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடக்கிறது. இந்த அரசு, ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
ஊழல் புகார்கள் உள்ள தால் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு இதில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தாக்குதல்
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்த விஷயத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த ஷேக் ஹசீனா, முதல் முறையாக தற்போது மவுனம் கலைத்துள்ளார்.
அவர் பேசிய ஆடியோ, அவரது அவாமி லீக் கட்சியின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வங்காள மொழியில் தழுதழுக்கும் குரலில் அவர் பேசியுள்ளதாவது:
என்னை கொல்வதற்கு நடந்த பல முயற்சிகளில் இருந்து கடவுள் என்னை காப்பாற்றியுள்ளார். கடந்த, 2004ல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
அதில் நான் தப்பினேன், ஆனால், 24 பேர் பலியாயினர். அதுபோல, 2000ம் ஆண்டு ஜூலை மாதம் கோடாலிபராவில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றனர். கடந்தாண்டு ஆக., 5ம் தேதி என்னைக் கொல்வதற்கு மிகப்பெரிய திட்டத்தை எதிர்க்கட்சிகள் தீட்டியிருந்தன.
கிட்டதட்ட 20 - 25 நிமிட இடைவெளியில், மரணத்தில் இருந்து தப்பினேன். பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, என் சகோதரியுடன் அங்கிருந்து தப்பினேன்.
அதற்கடுத்த, 30 நிமிடங்களில் என் இல்லத்துக்குள் நுழைந்து, வன்முறை கும்பல் தாக்குதல்களில் ஈடுபட்டது.
இவ்வாறு, என் வாழ்க்கையில் கொலை முயற்சிகளில் இருந்து பல முறை தப்பியுள்ளேன். இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நான் மிகுந்த மன வேதனையில் உள்ளேன். நான் என் நாட்டை விட்டு, வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டியுள்ளது. அங்கு அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

