ADDED : ஏப் 22, 2025 06:53 AM
டொரான்டோ: கனடாவில் உள்ள ஹிந்து கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதுடன், அங்குள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரில் லட்சுமி நாராயணா கோவில் உள்ளது.
இங்கு, கடந்த 19ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் இருவர், கோவில் வளாகத்தின் நுழைவாயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதியதுடன், அங்குள்ள துாண்களில் 'காலிஸ்தான்' என்றும் எழுதியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர், போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'கோவிலை சேதப்படுத்திய நிகழ்வு, ஹிந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.
'இதை, வன்மையாக கண்டிக்கிறோம்; இது, ஆன்மிக மற்றும் கலாசார மையத்தின் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதலாக கருதுகிறோம்.
'இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.