வங்கதேச வன்முறை கனடா பார்லியில் எதிரொலிப்பு; இந்திய வம்சாவளி எம்.பி., கொந்தளிப்பு
வங்கதேச வன்முறை கனடா பார்லியில் எதிரொலிப்பு; இந்திய வம்சாவளி எம்.பி., கொந்தளிப்பு
UPDATED : செப் 17, 2024 01:59 PM
ADDED : செப் 17, 2024 11:02 AM

ஒட்டவா: 'வங்கதேச வன்முறையில் ஹிந்துகள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, செப்டம்பர் 23ம் தேதி கனடா பார்லிமென்ட் முன்பாக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்' என இந்திய வம்சாவளி எம்.பி., சந்திர ஆர்யா தெரிவித்தார்.
வங்கதேசத்தில் சமீபத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, நாடு முழுவதும் பரவலான வன்முறை வெடித்துள்ளது. 27 மாவட்டங்களில் ஹிந்துக்கள் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். கலவரத்தில் ஹிந்து கோவில்கள் கடுமையாக குறிவைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சிறுபான்மையினர் குறிப்பாக குறிவைக்கப்பட்டுள்ளனர் என்பதை வங்கதேசத்தில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி ஒப்புக் கொண்டுள்ளது . ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் தலைவர்களும் கொல்லப்படுவதும், அவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பதும், நாட்டில் கொந்தளிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி., சந்திரா ஆர்யா, வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை குறித்து கவலை தெரிவித்தார். கனடாவில் பார்லிமென்டில் அவர் பேசியதாவது:
வங்கதேச வன்முறையில் ஹிந்துகள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, செப்டம்பர் 23ம் தேதி கனடா பார்லிமென்ட் முன்பாக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வங்கதேசத்தில் மத சிறுபான்மையினரின் மக்கள் தொகை 1971ம் ஆண்டு முதல் குறைந்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள உறவினர்களைப் பற்றி கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் கவலைப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
சந்திர ஆர்யா யார்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி.யான சந்திரா ஆர்யா, இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா பார்லிமென்டில் அவர் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசும் வீடியோ வைரலானபோது அவர் கவனம் பெற்றார் .

