UPDATED : செப் 29, 2024 12:05 AM
ADDED : செப் 28, 2024 11:59 PM

பெய்ரூட், செப். 29- லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது நீண்ட காலமாக தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையால் தாக்கி கொன்றது. கடந்த 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா அமைப்பால் ஏற்பட்ட தொல்லைகளுக்கு முடிவு கட்டியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் தொடர்ந்த போர் ஓராண்டை எட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் உடன் ஒப்பிடுகையில், ஹிஸ்புல்லா, 10 மடங்கு அதிக வலுவானது. லெபனான் மக்கள் தொகை 54 லட்சம். ஒரு லட்சம் உறுப்பினர்களை கொண்ட ஹிஸ்புல்லா மொத்த லெபனானை தன் கட்டுப்பாட்டில் வைத்துஉள்ளது.
இஸ்ரேலை தீவிரமாக எதிர்க்கும் மற்றொரு அண்டை நாடான ஈரானும், அந்த அமைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது.
பெரும் பங்கு
கடந்த 1992ல் ஹிஸ்புல்லா தலைவர் அப்பாஸ் அல் முசாவி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஹசன் நஸ்ரல்லா அப்பதவிக்கு வந்தார். ஹிஸ்புல்லாவை பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக வளர்த்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.
இஸ்ரேலை ஜீரணிக்க முடியாத, ஒவ்வொரு நாட்டின் உதவியையும் அவர் கேட்டு பெற்றார். அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகளில் இருந்து அதிநவீன ஆயுதங்களை திரட்டினார். தற்போது அந்த அமைப்பிடம், 1.5 லட்சம் ஏவுகணைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் பெரும்பாலானவை, இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள தெற்கு லெபனான் நகர்களிலும், கிராமங்களிலும் வீடுகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதை இஸ்ரேல் உளவுப்படை கண்டறிந்து, வீடியோ பதிவு செய்துள்ளது.
கடந்த 2006ல் இஸ்ரேல் நடத்திய போரின் போது, லெபனானை பாதுகாப்பதில் ஹிஸ்புல்லா முக்கிய பங்காற்றியது. இதையடுத்தே லெபனான் நிர்வாகம் அதன் கைக்கு வந்தது. ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் அறிவிக்கப்படாத அதிபராக செயல்பட்டார்.
அவரது வழிகாட்டலில், ஹிஸ்புல்லா உலகெங்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி தொல்லை கொடுத்து வந்தது.
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு மீது பலத்த தாக்குதல் நடத்தி, அதன் செயல்களை கணிசமாக கட்டுப்படுத்திய பின், இஸ்ரேலின் பார்வை ஹிஸ்புல்லா பக்கம் முழுமையாக திரும்பியது.
பல ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, எக்கச்சக்கமான தகவல்களை திரட்டிய இஸ்ரேல் உளவுப்படை, தீர்த்துக் கட்ட வேண்டிய முக்கிய தளபதிகள் இருப்பிடம், நடமாட்டம் குறித்த துல்லியமான வரைபடத்தை தயாரித்தது.
அதன் அடிப்படையில், கடந்த மாதம் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலை துவங்கியது. இலக்கு தவறாமல் சென்று தாக்கக் கூடிய அதன் நவீன ஏவுகணைகள், ஹிஸ்புல்லாவின் தளபதிகளை ஒருவர் பின் ஒருவராக தாக்கி வீழ்த்தின.
நாள் குறித்தது
கிட்டத்தட்ட முக்கிய தளபதிகள் அனைவரையும் கொன்ற பிறகே, ஹசன் நஸ்ரல்லாவுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் ராணுவம்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில், ஒரு ஆறு மாடி குடியிருப்பின் அடித்தளத்தில் ஹிஸ்புல்லா தலைமையகம் இருப்பதும், நஸ்ரல்லா அங்கு ரெகுலராக வந்து செல்வதும் உறுதி செய்யப்பட்டது.
நஸ்ரல்லா நேற்று முன்தினம் இரவு தலைமையகத்தில் உள்ள தன் அலுவலகத்துக்கு வந்த போது, மின்னல் வேகத்தில் செயல்பட்டது இஸ்ரேல்.
அதன் போர் விமானங்கள் இருட்டை கிழித்துக் கொண்டு, லெபனான் எல்லைக்குள் பறந்து, பெய்ரூட் நகருக்கு மேலே பறந்தபடி ஏவுகணைகளை வீசின. குறி தவறாமல் அவை தாக்கியதில், ஹிஸ்புல்லா தலைமையக கட்டடம் நொடிகளில் தரைமட்டமானது.
'ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இனி இந்த உலகுக்கு அவர் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்' என, இஸ்ரேல் ராணுவம் சுடச்சுட செய்தி அறிவித்தது.
நேற்று அதிகாலை வெளியான அந்த தகவலை உடனடியாக யாராலும் ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. நேற்று முற்பகலில் தான் ஹிஸ்புல்லா அமைப்பு அதை உறுதி செய்தது. அதன் பெரியப்பா என குறிப்பிடப்படும் ஈரானும் அச்செய்தியை உறுதி செய்தது.
ஹிஸ்புல்லாவின் இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட மேலும் ஆறு பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், 91 பேர் காயம் அடைந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. லெபனான் அரசு அதை மறுக்கவில்லை.
கடந்த ஐந்து நாட்களில் நடத்தப்பட்ட இஸ்ரேல் தாக்குதல்களில், 720 பேர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்தது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி ஒருவரும் இதில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.