ADDED : ஆக 07, 2025 12:15 AM
ஹாங்காங்:ஹாங்காங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் 350 மி.மீ., அளவுக்கு பெய்தது.
நம் அண்டை நாடான சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், நேற்று கனமழை பெய்தது. மிக குறுகிய நேரத்தில், 350 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.
கடந்த, 1884ம் ஆண்டில் இப்படி ஒரே நாளில் அதிகனமழை பெய்தது. அதற்கு, 141 ஆண்டுகளுக்குப் பின், இந்த அளவுக்கு அங்கு மழை பெய்துள்ளது.
இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், கடைகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மருத்துவ சேவையும் தடைப்பட்டன. போக்குவரத்தும் முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்டி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளது.

