இணையத்தில் ஒரு ஸ்டார் மதிப்பீடு; மோசமான விமர்சனத்தால் கொலை மிரட்டல் விடுத்த ஹோட்டல் உரிமையாளர்
இணையத்தில் ஒரு ஸ்டார் மதிப்பீடு; மோசமான விமர்சனத்தால் கொலை மிரட்டல் விடுத்த ஹோட்டல் உரிமையாளர்
UPDATED : பிப் 24, 2025 09:29 PM
ADDED : பிப் 24, 2025 09:27 PM

டோக்கியோ: ஜப்பான் ஹோட்டலுக்கு இணையத்தில் மோசமான தர மதிப்பீடு வழங்கிய வாடிக்கையாளர்கள் இருவருக்கு, உரிமையாளர் கொலை மிரட்டல் விட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள உயர் ரக அந்தஸ்து பெற்றது டொயோஜிரோ என்ற ஹோட்டல். இங்கு ரேமன் வகை உணவுகள் பிரசித்திம்.
இங்கு சாப்பிடச்சென்ற வாடிக்கையாளர்கள் இருவர், இணையத்தில் ஒரு நட்சத்திரம் மட்டுமே கொடுத்து மோசமான தர மதிப்பீடு வழங்கியிருந்தனர்.
இதைக்கண்ட ஹோட்டல் உரிமையாளருக்கு ஆத்திரம் வந்தது. இன்ஸ்டாகிராம் தளத்தில் அந்த வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
அந்த இருவரையும் அடையாளம் காட்டுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் யென் (இந்திய மதிப்பில் 58 ஆயிரம் ரூபாய்) பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
''நீங்கள் இங்கு மீண்டும் வந்து சாப்பிட வேண்டும். நல்ல தர மதிப்புரை எழுதி போட்டோவுடன் வெளியிட வேண்டும். இல்லையெனில் உங்களை மன்னிக்க மாட்டேன். உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு பற்றிக்கூட கவலைப்பட மாட்டேன்' என்று கூறி, கொலை மிரட்டலும் விடுத்தார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரை குறை கூறினர். பலர் கடுமையாக விமர்சித்தனர்.
அதன் பிறகே தவறை உணர்ந்த உரிமையாளர், தனது பதிவை அழித்து விட்டு மன்னிப்பு கேட்டார்.
தர மதிப்பீடு குறைத்து போட்டதற்கு கொலை மிரட்டல் வரை போனது, ஜப்பான் உணவக உரிமையாளர்கள் மத்தியிலும், இணையத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

