ADDED : செப் 28, 2024 08:02 AM
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களை சக்திவாய்ந்த 'ஹெலீன்' சூறாவளி புயல் தாக்கியதில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள் இருளில் மூழ்கின.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் பெர்ரி பகுதியை ஹெலீன் என்ற சூறாவளி புயல் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் நேற்று தாக்கியது. இது, அண்டை மாகாணங்களான ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, அங்கு சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள்சேதமடைந்தன.மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்,40 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள் இருளில் மூழ்கின.
ஹெலீன் புயலால், பல்வேறு மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. முதற்கட்ட தகவலின்படி ஹெலீன் சூறாவளி புயலால்,11பேர் பலியானதாக கூறப்படுகிறது.
அவர்களின் உடல்கள், அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் வலுவிழுக்கும் வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்பதால், புளோரிடா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.