சிறந்த திறமை, சிறந்த பிரதமர்: இத்தாலி பிரதமர் மெலோனியை பாராட்டிய டிரம்ப்!
சிறந்த திறமை, சிறந்த பிரதமர்: இத்தாலி பிரதமர் மெலோனியை பாராட்டிய டிரம்ப்!
UPDATED : ஏப் 18, 2025 07:33 AM
ADDED : ஏப் 18, 2025 07:26 AM

வாஷிங்டன்: ''எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது'' என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை டிரம்ப் பாராட்டி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ம் தேதி அதிபர் டிரம்ப் வெளியிட்டார். பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார். அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளுக்கு விதித்த இறக்குமதி வரிகளுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் தனது உறவை நீடிக்க விரும்பிய இத்தாலி பிரதமர் மெலோனி அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். வர்த்தகம் குறித்து விவாதிக்க டிரம்பை சந்தித்த முதல் ஐரோப்பியத் தலைவர் என்ற பெருமையை மெலோனி பெற்றார். அவரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார்.
அப்போது டிரம்ப் கூறியதாவது: மெலோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு சிறந்த பிரதமர் என்று நான் நினைக்கிறேன். அவர் இத்தாலியில் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார்.
அவர் உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர். இத்தாலி, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையே நல்ல உறவு இருக்கிறது. இவ்வாறு மெலோனியை டிரம்ப் பாராட்டி உள்ளார்.