UPDATED : ஜூன் 20, 2025 01:37 PM
ADDED : ஜூன் 20, 2025 01:50 AM

வாஷிங்டன்: தன் முந்தைய பதவிக்காலத்தின்போது, பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு, ஏமாற்றக் கூடிய நாடு என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது, 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று கூறியுள்ளார்.
பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. நான்கு நாட்களில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. அப்போது தன் முயற்சியால்தான், இரு நாடுகளும் மோதலை நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
எனினும், பாகிஸ்தான் அரசோ டிரம்ப் கூறியதை ஆமோதித்தது. மேலும், போரை நிறுத்துவதற்கு காரணமான அவருக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் கூறியது.
இதற்கிடையே, மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் துவங்கியுள்ளது. இதில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தது.
மேற்காசியாவில், ஈரான் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அண்டை நாடான பாகிஸ்தானையும் தன் வழிக்கு கொண்டு வருவதற்காகவே, அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் ஆசிப் முனிருக்கு, டிரம்ப் விருந்தளித்ததாக கூறப்படுகிறது.
விருந்துக்குப் பின் பேட்டியளித்த டிரம்ப், இதை உறுதிபடுத்தும் வகையில் கூறியுள்ளதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள். ஆனால், போர் நீடிக்காமல் இருக்க இரு நாடுகளும் முன்வந்தன. அதை பாராட்டவே பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து அளித்தேன்.
அந்தப் போரை நான் தான் நிறுத்தினேன்; ஐ லவ் பாகிஸ்தான். அதுபோல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிகச்சிறந்த நபர். அவருடன் நேற்றுதான் பேசினேன். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.
ஈரான் குறித்து மற்ற யாரையும்விட பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். ஈரானில் நடப்பது குறித்து பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி இல்லை. அதற்காக அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரானவர்கள் என்று கூற மாட்டேன்.
இரண்டு நாடுகள் குறித்தும் பாகிஸ்தானுக்கு தெரியும். ஈரான் குறித்து அதற்கு நன்கு தெரியும். அங்கு நடப்பது குறித்து நம்மைப் போலவே, பாகிஸ்தானும் அதிருப்தியில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேற்காசியாவில், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. இருப்பினும் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதை தடுக்கவே, இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் இதற்கு முன்பும் செயல்பட்டுள்ளது. தற்போது தேவைப்பட்டால், பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம் என்பதும் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் பங்கேற்பதற்கு ஆசிம் முனிர் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதை அமெரிக்கா மறுத்தது. இந்நிலையில், ஆசிம் முனிருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விருந்து அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட, பிரதமர், அதிபரைவிட ராணுவ தளபதிக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பதை இந்த விருந்து சுட்டிக்காட்டியுள்ளது.