'அமெரிக்காவுக்கு தீங்கு விளைவித்தால் வரி விதிக்கப்படும்'
'அமெரிக்காவுக்கு தீங்கு விளைவித்தால் வரி விதிக்கப்படும்'
ADDED : ஜன 29, 2025 01:36 AM
வாஷிங்டன்,“அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும்,” என, அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்டு டிரம்ப், முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
குறிப்பாக, 'உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன்' என கூறினர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி என வரிசையாக வரிகளை விதித்த டிரம்ப், நட்பு நாடான இந்தியாவுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக எச்சரித்து உள்ளார்.
'பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியில் வர்த்தகம் செய்து, டாலரின் மதிப்பை குறைக்க நினைத்தால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பேன்' என டிரம்ப் கூறியிருப்பது, இந்தியாவுக்கு எதிரான எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், குடியரசுக் கட்சி எம்.பி.,க் கள் முன்னிலையில் டிரம்ப் நேற்று பேசியதாவது:
அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது வரிகளை விதிக்கப் போகிறோம். அவர்கள் தங்கள் நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பினாலும், அது அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கிறது.
மற்ற நாடுகள் என்ன செய்கின்றன என்பதை பாருங்கள்.
இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மிகப்பெரிய அளவில் வரி விதிக்கின்றன. இனியும் அப்படி நடக்கவிடமாட்டோம். அமெரிக்கா முதன்மையானது என்பதே நம் கொள்கையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.