ADDED : பிப் 01, 2024 12:53 AM
இஸ்லாமாபாத், கருவூல மோசடி வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில், நேற்று முன்தினம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கருவூல மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் அவருக்கும், அவருடைய மனைவிக்கும், தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2018 -- 2022 வரை பிரதமராக இருந்தவர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 71. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால், பதவியில் இருந்து விலக நேரிட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் மீது, 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோசடி
இவற்றில், 'தோஷக்கானா' எனப்படும் அரசு கருவூல மோசடி தொடர்பான ஒரு வழக்கில், கடந்தாண்டு ஆகஸ்டில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அரசு ரகசியங்களை கசிய விட்டது தொடர்பான வழக்கில், அவருக்கு நேற்று முன்தினம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பார்லிமென்டுக்கு, வரும் 8ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், இம்ரான் கான் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் போட்டியிடுவதற்கான மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கட்சியின், 'பேட்' சின்னமும் ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான் சட்டத்தின்படி, பிரதமர் உள்ளிட்ட பதவிகளில் உள்ளோர், வெளிநாட்டுத் தலைவர்களால் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை, தோஷக்கானா எனப்படும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சில பொருட்களை சொந்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால், அதற்கான தொகையை செலுத்த வேண்டும்.
இந்த வகையில், பிரதமராக இருந்தபோது இம்ரான் கானுக்கு, 108 பரிசுகள் வந்ததாகவும், அவற்றில், 58 பொருட்களை மிகவும் குறைந்த விலை மதிப்பிட்டு, அவர் வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சவுதி அரேபிய இளவரசர் அளித்த நகைகளை, மிகவும் குறைந்த விலையை செலுத்தி வைத்துக் கொண்டதாக, இம்ரான் கான் மற்றும் அவருடைய மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி, 49, மீது வழக்கு தொடரப்பட்டது.
அபராதம்
இந்த வழக்கை விசாரித்த பொறுப்புடமை நீதிமன்றம், இருவருக்கும், தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.
மேலும், அடுத்த, 10 ஆண்டுகளுக்கு எந்த ஒரு அரசு முறை பொறுப்பையும் வகிக்க தடை விதிக்கப்பட்டது. இதைத் தவிர, பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் ஏற்கனவே சிறையில் உள்ளார்.
இந்நிலையில், அவருடைய மனைவி புஷ்ரா பீபி, தன் கணவர் இம்ரான் கான் உள்ள அடியாலா சிறையில் நேற்று சரணடைந்தார்.