இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை மனைவிக்கும் 7 ஆண்டு தண்டனை
இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை மனைவிக்கும் 7 ஆண்டு தண்டனை
ADDED : ஜன 18, 2025 12:31 AM

இஸ்லாமாபாத்: அல் - காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரின் மனைவி புஷ்ரா பீபிக்கு ஏழு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், 72. இவர், பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் என்ற கட்சியை துவங்கி, 2018ல் அங்கு பிரதமரானார்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, 2022ல் இம்ரான் பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், இம்ரான் மீது முறைகேடு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில், அரசு கருவூல பொருட்களில் ஊழல் செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு ஊழல் தடுப்பு பொறுப்பு நிறுவனமான தேசிய பொறுப்புடைமை பணியகம், கடந்த ஆண்டு இம்ரான், அவர் மனைவி புஷ்ரா பீபி மற்றும் சில தொழிலதிபர்கள் மீது முறைகேடு புகாரை முன்வைத்தது.
அதில், 'இம்ரான் பிரதமராக இருந்த காலத்தில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய 2,000 கோடி ரூபாய் அந்நாட்டுக்கு வந்தது.
'இதை, பாகிஸ்தான் தேசிய கருவூலத்தில் சேர்ப்பதற்கு பதிலாக, அவரது மனைவி புஷ்ரா அறங்காவலராக இருந்த அல் - காதிர் அறக்கட்டளையில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக பல 100 ஏக்கர் நிலத்தை அவர் லஞ்சமாக பெற்றார். இதில், சில தொழில் அதிபர்களுக்கும் தொடர்புள்ளது' என, குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான விசாரணை, அடியாலா சிறையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளியான இம்ரான் கானுக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் மனைவி புஷ்ராவுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கூடுதலாக இம்ரானுக்கு 3.10 லட்சம் ரூபாய் அபராதமும், புஷ்ராவுக்கு 1.65 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
அபராதத் தொகையை செலுத்த தவறினால், இம்ரானுக்கு கூடுதலாக ஆறு மாத சிறை தண்டனையும், புஷ்ராவுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய மற்ற அனைவரும் தலைமறைவான நிலையில், அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது.
உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்த புஷ்ரா பீபியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, நான்கு முக்கிய வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரானுக்கு, இந்த உத்தரவு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.