ADDED : அக் 25, 2024 02:22 AM
வாஷிங்டன், ''அமெரிக்கா, சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும், உலக அளவில் இந்தியாவை புறக்கணிக்க முடியாது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்.
வாஷிங்டனில், உலக வளர்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியா, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு, அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்பதால், தன் ஆதிக்கத்தை திணிக்க முயற்சிக்கவில்லை. அதே நேரத்தில் செல்வாக்கை அதிகரிப்பதே நோக்கமாகும்.
உலகில் உள்ள மக்களில், ஆறில் ஒருவர் இந்தியர். பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதால், இந்தியாவை புறக்கணிக்க முடியாது.
வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி குறியீடாக ஜவுளி, சைக்கிள், பைக் உற்பத்தி போன்றவை இருந்த காலம் முடிந்துவிட்டது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சியை பாருங்கள். இதனால், இந்தியாவை யாரும் புறக்கணிக்க முடியாது.
புவிசார் அரசியலில், எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதும் முக்கியம்.
வெகுதொலையில் இருக்கும் அமெரிக்காவும் சரி, அருகில் இருக்கும் சீனாவும் சரி, எந்த நாடாக இருந்தாலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது.
பல நாடுகள் அடங்கிய அமைப்புகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது.
அதேநேரத்தில் அந்த அமைப்புகள், தற்போதைய பிரச்னைகள், சவால்களுக்கு தீர்வு தருவதாக இருக்க வேண்டும்.
தங்களுடைய அனுபவங்களை, வெற்றி பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும், மற்ற நாடுகளும் வளர்ச்சியை காண வேண்டும் என்ற நோக்கம் கொண்டவையாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

