அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிய 24 மணி நேரம்! கெடு
அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிய 24 மணி நேரம்! கெடு
UPDATED : ஆக 06, 2025 10:04 AM
ADDED : ஆக 06, 2025 12:38 AM

வாஷிங்டன்: ''ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதனால், அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்தப் போகிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் முடிவை மாற்றிக் கொள்ளும்படி, இந்தியாவுக்கு அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்ரவரியில், ரஷ்யா போர் தொடுத்தது. இதை நிறுத்தும்படி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா கேட்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடக்கும் ரஷ்யா - உக்ரைன் போரில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா விற்பனை செய்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திய நம் நாடு, மலிவு விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. முதலில் இந்த நடவடிக்கையை ஆதரித்த அமெரிக்கா, தற்போது எதிர்த்து வருகிறது. போதாதென்று, மேற்கத்திய நாடுகளும் வரிந்து கட்டி நிற்கின்றன. இதை
கண்டுகொள்ளாமல், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நம் நாடு தொடர்ந்து வாங்கி வருகிறது. இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு, 25 சதவீத வரியும், ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால், கூடுதலாக அபராதம் விதிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார்.
மேலும், இந்தியா - ரஷ்யாவின் பொருளாதாரம் செயலிழந்து விட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். முதலில், ஆக., 1ல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு, ஆக., 7க்கு மாற்றப்பட்டது.
இந்த அறிவிப்புடன் நிற்காமல், கடந்த சில நாட்களாக நம் நாட்டை மிரட்டும் வகையில் அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். இது தொடர்பாக, வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகியவை இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது; பொருத்தமற்றது. தேசிய நலன், பொருளாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்' என, குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த பதற்றங்களுக்கு மத்தியில், ஆங்கில செய்தி சேனலுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அளித்த பேட்டி:
இந்தியா ஒரு நல்ல சிறந்த வர்த்தக கூட்டாளி அல்ல. எங்களுடன் அந்நாடு நிறைய வர்த்தகம் செய்கிறது. நாங்கள் குறைந்த அளவிலேயே செய்கிறோம். இந்திய பொருட்களுக்கு, 25 சதவீத வரியை நிர்ணயித்தோம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அந்நாடு நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை மேலும் கடுமையாக அதிகரிக்கப் போகிறேன். ரஷ்யாவின் போர் நெருப்பில், இந்தியா எண்ணெய் ஊற்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம், 24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிக் கொள்ளும்படி, நம் நாட்டுக்கு அதிபர் டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.