ADDED : ஜூலை 17, 2025 02:53 AM

டாக்கா:மறைந்த பிரபல வங்க மொழி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேவின் பூர்வீக வீட்டை இடிக்க, வங்கதேச அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதை புனரமைக்க உதவுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவைச் சேர்ந்தவர் மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே. இவரது தாத்தா உபேந்திர கிஷோர் ரே வங்க மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர்.
இவர் வங்கதேசத்தின் டாக்காவில் பிறந்தார். அங்கு வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டில் தான் இயக்குநர் சத்யஜித் ரே தன் குழந்தை பருவத்தை கழித்தார். சத்யஜித் ரே குடும்பத்தினர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்ததும், அவரின் பூர்வீக வீடு அரசு வசமானது.
அங்கு செயல்பட்டு வந்த பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதையடுத்து, சத்யஜித் ரேவின் பூர்வீக வீடு கைவிடப்பட்டு சிதிலம் அடைந்தது. அதை இடிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சகம் சார்பில், வங்கதேச அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். சத்யஜித் ரே பூர்விக வீட்டை புதுப்பிக்கும் செலவை இந்தியா ஏற்கும் என்றும், அதை இடிப்பதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.