அமெரிக்காவில் பிடிபட்ட பயங்கரவாதி: நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா
அமெரிக்காவில் பிடிபட்ட பயங்கரவாதி: நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா
ADDED : ஜூலை 21, 2025 12:17 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி பவித்தர் சிங் படாலாவை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' என்ற பிரிவினைவாத அமைப்பு பஞ்சாபை அடிப்படையாக வைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதை மத்திய அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 13ம் தேதி ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்தவர்களை ஆயுதங்களுடன், எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில், பயங்கரவாதி படாலா, நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதி.
இந்நிலையில், அவரை இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தப்படி நாடு கடத்தி அழைத்து வரும் முயற்சிகளை இந்தியா துவக்கியுள்ளது.