ரஷ்யாவுக்கு சட்டவிரோத ஏற்றுமதி அமெரிக்காவில் இந்தியர் கைது
ரஷ்யாவுக்கு சட்டவிரோத ஏற்றுமதி அமெரிக்காவில் இந்தியர் கைது
ADDED : நவ 23, 2024 11:59 PM
வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு, விமான தொழில்நுட்ப பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த இந்தியரை, அமெரிக்க போலீசார் நேற்று கைது செய்தனர்.
நம் நாட்டைச் சேர்ந்த சஞ்சய் கவுசிக், 57, என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர், விமான தொழில்நுட்ப பொருட்களை ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக ஏற்று மதி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு, விமான உதிரி பாகங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக சஞ்சய் கவுசிக் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர், மியாமியில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு மறுசீரமைப்பு சட்டத்தை மீறி, ரஷ்யாவுக்கு பொது போக்குவரத்து மற்றும் ராணுவம் என, இரட்டை பயன்பாடு கொண்ட விமான உதிரி பாகங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்து வரும் சூழலில், விமான பொருட்களை ஏற்றுமதி செய்யும் சதித் திட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுஉள்ளது.
அவருக்கு சொந்தமான இந்திய நிறுவனத்துக்கு அந்தப் பொருட்களை அனுப்ப, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துஉள்ளது.
இந்த வழக்கில் சஞ்சய் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு கள் சிறை தண்டனையும், இந்திய மதிப்பில், 8.44 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.