நீயா... நானா....: இந்தியப் பெருங்கடலில் நங்கூரமிட்டுள்ள இந்தியா, சீன போர்க்கப்பல்கள்
நீயா... நானா....: இந்தியப் பெருங்கடலில் நங்கூரமிட்டுள்ள இந்தியா, சீன போர்க்கப்பல்கள்
ADDED : ஆக 27, 2024 12:35 PM

கொழும்பு: இந்திய பெருங்கடலில் யார் ஆதிக்கம் செலுத்துவது என இந்தியா சீனா இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், இருநாட்டு போர்க்கப்பல்களும் இலங்கை சென்றடைந்துள்ளன.
இந்திய பெருங்கடலில், ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஆய்வு என்ற பெயரில் அடிக்கடி உளவு கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலங்கைக்கு அனுப்பி வருகிறது. இதற்கு நமது அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி மறுத்தாலும், பல கப்பல்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு ஆய்வு என காரணத்தை கூறுகிறது. அவ்வாறு முகாமிடும் சீன கப்பல்களை நமது உளவுத்துறையும் கடற்படையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதேநேரத்தில் இந்தியாவுக்கு மற்றொரு தலைவலியாக, பாகிஸ்தான் கடற்படையை கட்டமைக்க சீனா உதவி வருகிறது. இதற்காக பல்வேறு உதவிகளையும் போர்க்கப்பல்களையும், நீர்மூழ்கி கப்பல்களை அந்நாட்டிற்கு அளித்து வருகிறது 2028 - 2029 ம் ஆண்டில், இந்தியாவின் மேற்கு பிராந்தியத்தில் நமது கடற்படையிடம் உள்ள கப்பல்களுக்கு இணையாக பாகிஸ்தானும் கப்பல்களை வைத்திருக்கும் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் ஹெபெய், வூஜிஸ்ஹான், குயிலியான்ஷான் என்ற 3 போர்க்கப்பல்கள் இலங்கையில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் முகாமிட்டு உள்ளன. அதில், 1,500 பேர் முகாமிட்டு உள்ளனர். இக்கப்பல்களுக்கு, வழக்கமான முறைப்படி இலங்கை கடற்படை வரவேற்பு அளித்து உள்ளது.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: கடற்கொள்ளைக்கு எதிராக பணியில் ஈடுபட்டுள்ள கப்பல் உள்ளிட்ட சீன போர்க்கப்பல்கள், நீண்ட நாட்களாக இந்திய பெருங்கடல் பகுதியில் முகாமிட்டு உள்ளன. இப்பகுதியில் சீன கப்பல்களின் நடவடிக்கைகள், இப்பகுதியில் அந்நாடு தளவாடங்களை சேர்த்து வருவது ஆகியன இந்தியாவுக்கு பெரிய சவாலாக உள்ளன. இப்பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, இந்திய போர்க்கப்பலான கேப்டன் சந்தீப் குமார் தலைமையில் 410 வீரர்களுடன் ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் கொழும்பு சென்றடைந்தது. இந்திய போர்க்கப்பலுக்கும் இலங்கை கடற்படை வரவேற்பு அளித்தது. சீனா மற்றும் இந்திய கடற்படை கப்பல்களுடன் இலங்கை கடற்படை தனித்தனியே பயிற்சி மேற்கொள்ள உள்ளது.