கராச்சியில் ஹிந்து குடும்பத்தினரின் ஓட்டலில் பிரபலமாகும் இந்திய உணவுகள்
கராச்சியில் ஹிந்து குடும்பத்தினரின் ஓட்டலில் பிரபலமாகும் இந்திய உணவுகள்
ADDED : மே 12, 2024 04:44 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து நடத்தும் ஓட்டல் மற்றும் அங்கு தயாரிக்கப்படும் உணவு பற்றி, இணையதளவாசி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்திய உணவு வகைகள் அங்கு பிரபலமாகி வருகிறது.
பாகிஸ்தானின் கராச்சி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அங்கு, மும்பையில் பிரபலமான பாவ்பஜ்ஜி மற்றும் வடபாவ் உள்ளிட்ட உணவு வகைகள் செய்யப்படுகிறது. இங்கு, சைவம் மற்றும் அசைவ உணவுகளும் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இணையதளவாசி ஒருவர், இந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
அந்த வீடியோவில் ஓட்டல் உரிமையாளரான கவிதா கூறுகையில், வடபாவ் மும்பையில் பிரபலமான உணவு. கராச்சியில் வசிப்பவர்களுக்கும் இந்த உணவு அதிகம் பிடிக்கும் . ரமலான் மாதத்திலும் இந்த கடையை தொடர்ந்து நடத்தினேன் எனக்கூறியுள்ளார்.
இணையதளவாசியும் வடபாவை ருசித்துவிட்டு நன்றாக உள்ளதாக பாராட்டி உள்ளார். மேலும், கராச்சியில் உள்ள உணவு ஆர்வலர்கள் அனைவரும், கவிதாவை சகோதரி என அழைப்பதாகவும் பாராட்டி உள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியானதும் பாகிஸ்தானில் வைரலாக துவங்கி உள்ளது. பலரும் கவிதாவை பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் பாகிஸ்தானிய உணவுக்கு கிடைக்கும் வரவேற்பை போல், பாகிஸ்தானில் இந்திய உணவுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக ஒருவர் கருத்து பதிவிட்டு உள்ளார்.