விமானத்தில் பெண்களுக்கு தொல்லை சிங்கப்பூரில் இந்தியருக்கு 9 மாதம் சிறை
விமானத்தில் பெண்களுக்கு தொல்லை சிங்கப்பூரில் இந்தியருக்கு 9 மாதம் சிறை
ADDED : ஏப் 03, 2025 07:06 AM
சிங்கப்பூர் : அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில், 73 வயது இந்தியருக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, நவ. 18ல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமானம் சென்றது. அதில், இந்திய வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலசுப்ரமணியன் ரமேஷ், 73, என்பவர் பயணம் செய்தார்.
இந்த பயணத்தின்போது, விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் நான்கு பேருக்கு அவர் பாலியல் தொல்லை தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
விமான மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அப்போது, அவருக்கு அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
குற்றத்தை, பாலசுப்ரமணியன் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.
வழக்கமாக, இது போன்ற குற்றச்சாட்டுகளில், ஒவ்வொரு பாலியல் தொல்லைக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையோ, பொது இடத்தில் பிரம்படி தண்டனையோ வழங்கக் கூடும்.
இந்த வழக்கில், குற்றவாளியின் வயதை கருத்தில் வைத்து குறைவான தண்டனை வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.