இந்திய வம்சாவளி தொழிலதிபருக்கு அமெரிக்காவில் பொருளாதார தடை
இந்திய வம்சாவளி தொழிலதிபருக்கு அமெரிக்காவில் பொருளாதார தடை
ADDED : ஏப் 12, 2025 04:25 AM

நியூயார்க்: மேற்காசிய நாடான ஈரான் - அமெரிக்கா இடையே அணு ஆயுதம் உட்பட பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடிக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து எதையுமே வாங்கக் கூடாது என்றும், நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜுக்விந்தர் சிங் பிரார் வசிக்கிறார். இவருக்கு சொந்தமாக பல்வேறு கப்பல் நிறுவனங்கள் உள்ளன.
இவருக்கு சொந்தமான, 'குளோபல் டேங்கர்ஸ் பிரைவேட் லிமிடெட், பி அண்டு பி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' ஆகிய நிறுவனங்கள், நம் நாட்டை தலைமையகமாக வைத்து செயல்படுகின்றன.
இந்த இரு நிறுவனங்களின் கப்பல்கள் வாயிலாக, ஈரானின் பெட்ரோலிய பொருட்கள் மற்ற நாடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளன.
மேலும், தொழிலதிபர் ஜுக்விந்தர் சிங் பிராருக்கு சொந்தமான கப்பல்கள் ஈராக், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் வளைகுடாவிற்கு அப்பால் உள்ள கடல்களில், ஈரான் பெட்ரோலிய பொருட்களை வினியோகம் செய்துள்ளன.
இந்நிலையில், பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானின் பெட்ரோலிய பொருட்களை வினியோகம் செய்ததாக கூறி, தொழிலதிபர் ஜுக்விந்தர் சிங் பிரார் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது, பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள ஜுக்விந்தர் சிங் பிராருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அந்நாட்டில் அவருக்கு சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும்.